Author

Alexandra Kollontai

Alexandra Kollontai

ரஷ்ய புரட்சியாளரான அலக்சான்ட்ரா கொலந்தாய் 1872இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பிறந்தவர். இவரது தந்தை ரஸ்யப் படையில் இராணுவத் தளபதியாக இருந்தார். தாயார் பின்லாண்ட்டைச் சேர்ந்த ஒரு பண்ணை உரிமையாளரது மகள். அந்த நேரம் பின்லாண்ட் ரஸ்யாவினது ஒரு பகுதியாக இருந்தது. அவரது கல்வியை அங்குதான் தொடர்ந்தார். இந்த வேளையில்தான் தொழிலாள வர்க்கத்தினரதும், விவசாயிகளினதும் பிரச்சனை பற்றி அறிந்து கொண்டார். 1893ல் தனது மைத்துனரைத் திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்ப வாழ்க்கை மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. வீட்டுக்குள்ளே தான் சிறைப்படுத்தப் பட்டதாக உணர்கிறார். ஒரு பெரிய நெசவாலை ஒன்றின் கண்காணிப்பின்போது தொழிலாளர் குடியிருப்பொன்றில் இறந்து கிடந்த சிறுவனொருவனைக் கண்டார். இந்த நிகழ்வு அவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக, அவரை ஒரு புரட்சியாளராக மாற்றியதெனலாம். 1890களின் பின்னதாக அரசியலில் ஈடுபடத் தொடங்கும் கொலந்தாய் 1898ல் தனது குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறியபின் அரசியல் பொருளாதாரம் கற்பதற்காக சூரிச் செல்கின்றார். 1914களிலிருந்து போல்சிவிக் கட்சியில் இணைந்து செயற்படுகின்றார். அவரது முதலாவது படைப்பான “குழந்தைகளும் அவர்களது சுற்றாடலுக்கும் இடையிலான அபிவிருத்தி” மார்க்சிய சஞ்சிகையான “Obrazovaniie”இல் வெளியாகியது. லெனினது மத்திய கமிட்டியின் ஒரேயொரு பெண் உறுப்பினர். தொடர்ந்த அவரது செயற்பாடுகளில் சர்வதேச பெண்களியக்கத்தின் செயலாளராகவும் புரட்சிக்குப் பின்னர் அரசின் சமூக காப்புறுதியில் மக்கள் ஆணையாளராகவும், சோவியத் குடியரசின் ஸ்கன்டிநேவியன் நாடுகளுக்கான தூதுவராகவும், ராஜதந்திரியாகவும் பணியாற்றினார்.l